தமிழக அரசியல் அரங்கில் சில ஆளுமைகளை மட்டும்தன் ஒற்றை எழுத்தில் விளிப்பார்கள். அந்த நபர்களும் மிக வீரியமான அரசியல்வாதியாக இருப்பார்கள். கடந்த 2006 முதல் 2011வரை தமிழகத்தை தி.மு.க. ஆண்ட காலத்தில் ‘அ-னா’ என்று சொன்னால் டோட்டல் தமிழகமும் அதிரும். அது, முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியை குறிக்கும். அதேபோல் ‘க-னா’ என்று ஒருவரையும் இப்படி சற்றே மிரட்சியோடு அழைப்பார்கள். அவர்தான் கருப்பசாமி பாண்டியன். 

வீரம் விளைந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்தான் கருப்பசாமி பாண்டியன். எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதா காலத்திலும் கோலோச்சிய இவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் செல்வாக்கு இருந்தது. பொதுவாக முக்குலத்தோர் கட்சியை அணுசரித்து செல்வதுதான் அ.தி.மு.க.வின் வழக்கம். சமீபத்தில் கூட நாடார் சங்கத்தினர் இதை வெளிப்படையாக போட்டுடைத்தனர். அந்த வகையில் கருப்பசாமி பாண்டியனுக்கும் அ.தி.மு.க. முக்கியத்துவம் தந்தது. 

இந்த நிலையில் ஜெயலலிதாவுடன் கொண்ட பிணக்கு காரணமாக 2001-க்கு பின் அ.தி.மு.க.வை விட்டு விலகியவர் தி.மு.க.வில் இணைந்தார். எம்.எல்.ஏ.வானார்.  ஆனால் கருப்பசாமி பாண்டியனின் வரவை திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.வினர் விரும்பவில்லை. பவர் பாலிடிக்ஸில் அவர்களுக்குள் கடும் பிரச்னைகள் ஓடிக் கொண்டே இருந்தன. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவரான டி.பி.எம்.மைதீன் கானுக்கு அமைச்சர் பதவியும், ஆவுடையப்பனுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கிய கருணாநிதி கருப்பசாமி பாண்டியனை கண்டுகொள்ளவில்லை. காரணம், எம்.ஜி.ஆர். காலத்தில் தி.மு.க.வுக்கு கொடுத்த குடைச்சல்களே கருணாநிதியின் கோபத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. 

ஸ்டாலினின் ஆதரவாளராக இருந்த கருப்பசாமி பாண்டியனால் இந்த தடைகளை தாண்டி மேலே வரமுடியவில்லை. இதனால் சில காலத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தார். திரும்பி வந்த க-னாவை நெல்லை அ.தி.மு.க.வினர் பெரிதாய் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீண்டும் தி.மு.க.வுக்கு சென்றவரை உயர்நிலை செயல்திட்ட குழு செயலாளராக்கி சீனியர் வரிசையில் அமர்த்தினார் ஸ்டாலின். ஆனால் ரிட்டயர்டு ஆன ஆபீஸர் போல் அமர்ந்திருக்க வேண்டி இருந்ததே தவிர கருப்பசாமி பாண்டியனால் அரசியலில் கலக்க முடியவில்லை. அந்தளவுக்கு நெல்லை தி.மு.க.வில் நெருக்கடி. இதனால் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு தாவும் முடிவை எடுத்தார். 

இந்நிலையில்  கடந்த ஞாயிறு அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்து, அ.தி.மு.க.வில் இணைந்தவர், பின் மரியாதை நிமித்தமாக ஓ.பி.எஸ்.ஸையும் சந்தித்தார். அவரோடு தி.மு.க. நிர்வாகிகள் 60 பேர் அ.தி.மு.க.வில் இணைந்ததாக சொல்லப்படுகிறது. கருப்பசாமிபாண்டியனின் இந்த முடிவை பார்த்து நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் சிரிக்கின்றனர். ‘மூழ்கும் கப்பலுக்குள் தாவி குதித்திருக்கிறார் கருப்பசாமிபாண்டியன். இங்குட்டும் அங்குட்டுமாக தாவி ஏதோ டவுன் பஸ் போல் தன் பெயரை டேமேஜ் செய்துகிட்டார்.’ என்று நக்கல் விமர்சனம் செய்கின்றனர். ஜெயக்குமார் அண்ணே, இந்த நெல்லை தி.மு.க.காரங்கள கொஞ்சம் என்னான்னு கேளுங்க....