இன்றைய  கூவத்தூர் குழப்ப அரசியலின் நாயகன்,வில்லன், காமெடியன், கடைசியாய் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதால் குணச்சித்திரம் என்று பல பாத்திரங்களைத் தாங்கியிருக்கும் கருணாஸை ‘பொறுத்தது போதும் இனி பொங்கி எழு’ பாணியில் மருத்துவமனைக்குள்ளேயே சென்று கைது செய்ய நெல்லை போலிஸார் முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு தினங்களுக்கு முன்பு, நெல்லை போலீஸார் தன்னை கைது செய்ய வருவது அறிந்து, நெஞ்சு வலி இருப்பதாக்க் கூறி வடபழநி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆன கருணாஸ் இப்போதைக்கு டிஸ்சார்ஜ் ஆவதாகத் தெரியவில்லை.

ஏற்கனவே கைதான  கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் உடல்நிலை சரியில்லை என்றாலும் 24 மணிநேரத்துக்குள் அவர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.  அப்படி இல்லையென்றால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்தாகிவிடும் என்ற நிலையில், தற்போது கருணாஸ் தரப்பு வழக்கறிஞர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்குச் சென்று கருணாஸுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அட்மிட் ஆகியுள்ளார் என மருத்துவச் சான்றுகளை  கொடுத்துள்ளார். 

இது போக, மருத்துவமனையில் ஒழுக்கமாக நெஞ்சு வலிக்கு வைத்தியம் பார்ப்பதை விட்டுவிட்டு வரிசையாக தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் தினகரன் ஆட்களை சந்திப்பது, கூவத்தூர் மேட்டர் குறித்து ஃபர்ஸ்ட் லுக், டீஸர், மற்றும் ட்ரெயிலர் வெளியிடுவது போன்ற குசும்பான வேலைகளில் கருணாஸ்  ஈடுபட்டு வருவதால் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வட்டாரம் அவர் மீது உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்களாம்.

இதன் தொடர்ச்சியாக, நெல்லையிலிருந்து கருணாஸைக் கைது செய்ய வந்த போலீஸாரில் பாதிப்பேர் இன்னும் ஊர் திரும்பாத நிலையில் இன்று இரவு அல்லது அதிகாலைக்குள் மருத்துவமனைக்குள் நுழைந்து கருணாஸ் கைது செய்யப்படக்கூடும் என்கிறார்கள்.