குஷ்புவை அடுத்து முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் நடிகை குஷ்பு, மதன் ரவிச்சந்திரன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். அடுத்து நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.,வும் தமது ஒரே ஒரு கோரிக்கையை நிறைவேற்றினால் தமது கட்சியை பாஜகவுடன் இணைக்க தயார் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த குஷ்பு, முதலில் திமுகவில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து குஷ்பு கருத்து தெரிவித்தபோது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியம் ஏற்பட்டது.

 ஆனால் அது அவரது அரசியல் பாதை பாஜகவை நோக்கி திரும்புவதற்கான தொடக்கப்புள்ளி என்று அப்போது சிலர் யூகித்தனர். அப்போது தன்னை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி நான் பதில் கூற மாட்டேன் என்று தொடர்ந்து மௌனம் காத்தார். இந்நிலையில் பாஜகவில் குஷ்புவுக்கு என்ன பதவி வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் பாஜகவுடன் தமது கட்சியை இணைக்கத் தயார் என கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

 

அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கருணாஸ், திமுக இரண்டாக பிளவு பட்டபோது சசிகலா அணியில் இருந்தார். அடுத்து டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவளித்தார். எடப்பாடி பழனிசாமி அரசை கடுமையாக எதிர்த்தார். பிறகு சமாதானமாகி தனது ஆதரவு எப்போதும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்குத்தான் என வெளிப்படையாகத் தெரிவித்து முதல்வரை சந்தித்தார்.  இந்நிலையில், பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.