karunas pressmeet about beef issue
ஜனநாயக நாட்டில் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்பதை யாரும், யாருக்கும் உத்தரவிட கூடாது என எம்எல்ஏ கருணாஸ் கூறினார்.
மத்திய அரசு, மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையொட்டி கேரளா, புதுச்சேரி, கோவா, மேகாலயா உள்பட பல மாநிலங்களில் மத்திய அரசின் மாட்டு இறைச்சி விவகாரத்துக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதைதொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் மாட்டு இறைச்சி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றி இன்று சட்டமன்ற மானிய கோரிக்கை மீதான விவாத நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கான பதிலில், திருப்தி ஏற்படாத்தால், எதிர்க்கட்சியினர் வெளியேறினர். அதேபோல் அதிமுகவின் தோழமை கட்சி எம்எல்ஏக்களும் வெளியேறினர். அதில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாட்டு இறைச்சி என்பது இன்று அனைவருக்கும் சராசரியான ஒன்றாக இருக்கிறது. இதை மற்ற மாநிலங்கள் ஏற்கவில்லை. அதேபோல் தமிழகமும் ஏற்க வேண்டாம் என கூறி தனி தீர்மானம் கொண்டு வந்தோம். அதில் தமிழக அரசு முறையான பதில் அளிக்கவில்லை.
மாடுகள் என்பது பண்டைய காலத்தில் இருந்தே தமிழர்களின் பண்பாட்டில் கலந்து இருக்கிறது. மாடுகளை பற்றி ரிக் வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரனுக்கு எருமைகளை பலி கொடுத்ததாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காளைகள் விவசாயிகளின் நண்பனாக, விவசாய நிலங்களில் வேலை பார்த்து வந்த்து. காளைகளை விவசாயத்துக்கும், பசு மாடுகளை வீடுகளிலும் பயன்படுத்துகிறார்கள். மாடுகளை தங்களது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினராகவே பார்த்து வருகிறார்கள்.

இதனால்தான் கோயில்களில் சிவனுக்கு முன்னால், நந்தி சிலையை வைத்து, பூஜிக்கிறார்கள். பசுவை கோமாதாவாக வணங்குகிறார்கள். பல ஆண்டுகளில் உணவு இல்லாத நேரம் ஏற்பட்டபோது, மாட்டு இறைச்சியை சாப்பிட்டார்கள். காலப்போக்கில், அது மாட்டு இறைச்சிக்கு விருப்பம் தெரிவித்து பலரும் சாப்பிட்டு வருகின்றனர்.
ஜனநாயக நாட்டில் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்பதை யாரும், யாருக்கும் உத்தரவிட கூடாது. மாட்டு இறைச்சி விவகாரத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சினிமா துறைக்கு நான் வருவதற்கு முன், சென்னைக்கு வந்தேன். அங்குள்ள கையேந்தி பவனில்தான் சாப்பிட்டேன். அந்த கடையில் மாட்டிறைச்சி இருந்தது. அந்த கடைக்காரர் என்னிடம் கேட்டார், சாம்பார் வேண்டுமா, மாட்டிறைச்சி குழம்பு வேண்டுமா என்று.
எதை வேண்டுமோ அதை சாப்பிடலாம் என சாதாரண கடைக்காரருக்கு தெரிந்துள்ளது. ஆனால், இதை சட்டமாக்கும் அரசுக்கு ஏன் தெரியவில்லை. மாட்டு இறைச்சி என்பது மக்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. அவர்களுக்கு வேண்டியதை சாப்பிடுவார்கள். அதை யாரும் தடுக்க கூடாது. இது நாட்டுக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கு எதிரானது.
மாட்டு இறைச்சி விவகாரத்தில் தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும் என எதிர்க்கட்சி சார்பில் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கான பதில் சரிவர இல்லை. இதனால், எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, தோழமை கட்சியான நாங்களும் வெளியேறினோம்.
மத்திய அரசின் இந்த மாட்டு இறைச்சி விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும். மத்திய அரசின் சட்டத்தை தமிழகத்தில் அறிவிக்க கூடாது என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறனார்.
