கூவத்தூரில் இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் தொடர்பாக வெளியாகி வரும் தகவல்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பலரை பதற்றத்தில் வைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஓ.பி.எஸ் கலகத்தை தொடங்கிய உடன் ஆட்சியை காப்பாற்ற சசிகலா தரப்பு தங்கள் எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்று தங்கவைத்தது. சுமார் 2 வாரங்கள் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்டதாக ஓ.பி.எஸ் மற்றும் தி.மு.க தரப்பு கூறினாலும், உள்ளே ஒரு உல்லாசபுரியே உருவாக்கப்பட்டு எம்.எல்.ஏக்கள் எப்போதும் உற்சாகத்துடன் வைக்கப்பட்டிருந்தனர் என்பது தான் உண்மை. 

எம்.எல்.ஏக்கள் சிலர் கூவத்தூரில் இருந்து கொண்டே ஓ.பி.எஸ்சுடன் பேரம் பேசிய தகவல் சசிகலா தரப்புக்கு கசிந்ததை தொடர்ந்து, சந்தேகத்திற்கு ஆளான எம்.எல்.ஏக்களின் கூவத்தூர் நிகழ்வுகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் உற்சாக பானத்தில் எம்.எல்.ஏக்கள் சிலர் ஆடிய ஆட்டம், துணை நடிகைகளுடன் சேர்ந்து அடித்த கும்மாளம் என எதுவுமே பாக்கியில்லாமல் வீடியோ எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

சசிகலாவின் நேரடி உத்தரவின் பேரில் இந்த வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் எதிர்காலத்தில் எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் தடுக்க அந்த வீடியோக்கள் உதவும் என்று எடுத்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் இருந்த இருப்பு தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் கூட சசிகலா தரப்பிடம் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது முதல் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது வரை அனைத்திற்கும் கருணாஸ் தான் பொறுப்பாளர் என்றும் சொல்லப்படுகிறது.வீடியோவை சசிகலாவிடம் கொடுப்பதற்கு முன்னதாக கருணாஸ் ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோக்களைத்தான் தற்போது வெளியிடப்போவதாக கருணாஸ் தரப்பு மிரட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனராம்.