கருணாஸ் பேச்சு குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

 

முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஞாயிறன்று கருணாஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் பேசிய கருணாஸ், அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் நடு ராத்திரியில் குடை பிடிப்பான் என்கிற பழமொழி எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும் என்று கூறினார். அதனால் தான் யார் என்ன செய்தாலும் தமிழகத்தில் வழக்கு பதியப்படுவதாக கருணாஸ் கூறியுள்ளார். 

மேலும் கூவத்தூரில் இந்த கருணாஸ் இல்லாமயா இந்த அரசாங்கம் உருவானது என விமர்சனம் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமியே நான் அவரை அடிப்பேன் என்று பயப்படுவார் என்று கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருணாஸ் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சியைத் தக்க வைத்ததில் தனக்கும் பங்குள்ளதாக கூறியதற்கு கருணாஸ் சசிகலா தரப்பிடம் பங்கு வாங்கியிருப்பார் என அவர் விமர்சித்துள்ளார். 

மேலும் சட்டத்தை மீறி யார் பேசியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கருணாஸ் பேசிய பேச்சுக்கள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். தான் பேசிய பேச்சுக்கான விளைவுகளை கருணாஸ் சந்தித்தே ஆக வேண்டும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.