அரசியலைப் பற்றி அறியாத, புரியாத, தெரியாத, ரஜினிகாந்த் இருக்கும் புகழோடு ஓய்வெடுக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார் நடிகரும், எம்எல்வுமான கருணாஸ்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகருமான கருணாஸ்..., “என்னைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் உலகம் அறிந்த சூப்பர் ஸ்டார், அவருக்கு அரசியல் என்பது அறியாத, புரியாத, தெரியாதவர். அவருக்கு அனுபவமும் கிடையாது. அவரது ரசிகர்கள் 40 ஆண்டுகாலமாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் அவர் அரசியலுக்கு வந்து அசிங்கங்களையும், அவமானங்களையும் சந்தித்து அவர் பெற்ற இன்பங்களை துளைத்து விடக்கூடாது. அக மகிழ்வோடு அவர் தற்போது உள்ள புகழோடு ஓய்வெடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

நான் திருவாடானை தொகுதியில் எம்எல்ஏஆவதற்கு சசிகலா ஒரு காரணம். சமூகரீதியில் எங்கள் அமைப்பு என்றும் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கும். டிடிவி தினகரன் டெல்லி பயணம் குறித்து எனக்கு தகவல் தெரியாது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அரசு அறிவித்திருப்பதை முக்குலத்தோர் புலிப்படை சார்பாக நான் வரவேற்கிறேன், எங்கள் சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கைகளான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் எந்த அரசியல் கட்சிக்கும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு உறுதுணையாக இருக்கும். பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ள வேலு யாத்திரை நடைபெறும். அதே நாள் அதே நேரத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக தெய்வீக ரத யாத்திரை நடத்தப்படும்” எனக் கூறினார்.