தமிழிசை கற்ற பரம்பரை அல்ல, தமிழர் உரிமைகளை விற்ற பரம்பரை என்று முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  

தூத்துக்குடி தொகுதி தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்த வேட்புமனு பரிசீலனையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர்கள் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. கனிமொழி பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டு பேரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை என் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. முறையாக சம்பாதித்த பணத்திற்கு தவறாமல் வருமானவரி கட்டி வருகிறேன். மேலும் நான் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர் அல்ல என்று காட்டமாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழிசைக்கு கருணாஸ் பதிலடி கொடுத்துள்ளார். குற்ற பரம்பரை என்ற சொல்லின் அர்த்தம் தெரியாமல் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட மக்களை ஒடுக்க ஆங்கிலேயே அரசு பயன்படுத்திய வார்த்தையை குற்ற பரம்பரை என்று கூறியுள்ளார். தமிழிசை கற்ற பரம்பரை அல்ல, உரிமைகளை விற்ற பரம்பரை. வேட்புமனுவைேய  சரியாக நிரப்பத்தெரியாத நீங்கள் கற்ற பரம்பரையா என தமிழிசைக்கு கருணாஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.