கூவத்தூர் ரிசார்ட்டில் நிகழ்ந்த கொடுக்கல் வாங்கல் தொடர்புடைய வீடியோக்களை விரைவில் கருணாஸ் தரப்பு வெளியிட தயாராகி வருவதாகவும், இதற்காக தி.மு.கவுடன் கருணாஸ் நெருங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கருணாஸ் மீது வழக்குப் பதிவு செய்தது முதலே அவருக்கு முழுமையான ஆதரவு அளித்து வருவது தி.மு.க மட்டுமே. கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக வெளிப்படையாக அறிக்கையே வெளியிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். நாடார்கள், வன்னியர்கள், கவுண்டர்களை இழிவாக பேசியும் கருணாசுக்கு ஆதரவாக ஸ்டாலின் துணை நிற்பதற்கான ஒரே காரணம் அவர் வசம் இருக்கும் கூவத்தூர் வீடியோல தான் என்கிறது தி.மு.க வட்டாரம். 

இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியான பிறகும் தி.மு.கவுடன் கருணாஸ் டச்சிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கருணாஸ் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். கடந்த 2017ம் ஆண்டு நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற போது அங்கு வந்த தேவர் பேரவை தலைவர் முத்தையாவுக்கும் கருணாஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. 

இந்த மோதலில் கருணாசின் காரும் சேதம் அடைந்தது. முத்தையாவின் காரும் சேதம் அடைந்தது. இந்த விவகாரத்தில் அப்போதே கருணாஸ் மீது புகார் கொடுக்கப்பட்டு, சி.எஸ்.ஆர் மட்டும் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் அந்த புகாரில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் கருணாஸ்க்கு தெரியவந்துள்ளது. உடனடியாக இது குறித்து தி.மு.க தரப்பில் கருணாஸ் பேசியதை தொடர்ந்தே முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் கருணாஸ் கைது செய்யப்படலாம் என்கிற தகவலை தி.மு.க தரப்பு மோப்பம் பிடித்து, கருணாஸ்க்கு கூறியுள்ளது. இதனை தொடர்ந்தே கருணாஸ் இரவில் சாலி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்லாமல் நண்பர்கள் வீட்டில் தங்க ஆரம்பித்துள்ளார். 

அதிலும் செவ்வாய் இரவு அல்லது புதன்கிழமை காலையில் கருணாஸ் வீட்டிற்கு நெல்லை போலீசார் வர உள்ள தகவலை தி.மு.க தனது சோர்ஸ் மூலம் தெரிந்து கருணாசை எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்தே கருணாஸ் மருத்துவமனைக்கு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் நேரில் சென்று கருணாசை சந்தித்துவிட்டு வந்துள்ளார். 

இப்படி பல்வேறு விதங்களில் தி.மு.க செய்து வரும் உதவியால் கருணாஸ் அந்த கட்சியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் சில வாக்குறுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு கூவத்தூர் வீடியோவை வெளியிடவும் அவர் முடிவெடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இதனால் டி.டி.வி தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாகவும், அதனால் தான் வெற்றிவேல் அவசர அவசரமாக சென்று கருணாசை மருத்துவமனையில் சந்தித்ததாகவும் சொல்கிறார்கள். அப்போது தி.மு.கவை  நம்பவேண்டாம், கூவத்தூர் விஷயத்தில் அடக்கி வாசியுங்கள் பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம் என்று வெற்றிவேல் கருணாசிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.