நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரை கண்டு பயப்படுவதாக கூறினார். மேலும், காவல்துறை அதிகாரி ஒருவரை, முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்கும்படி சவால் விடுத்தார். ஜாதி ரீதியான பல்வேறு சர்ச்சை கருத்துக்களை அவர் பேசிய பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைதொடர்ந்து, முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையொட்டி, யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 

 இதையொட்டி, கருணாஸ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் பரவியது. இதனால், கருணாஸ்  தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், ஏசியாநெட் தமிழ் சார்பில் எம்எல்ஏ கருணாஸை தொடர்பு கொண்டோம். அப்போது அவரது உதவியாளர் முத்து, செல்போனை எடுத்து பேசினார்.அதில், கருணாஸ் தலைமறைவாகியதாக தகவல் பரவியதே என கேட்டதற்கு, அவர் என்ன தவறு செய்தார் தலைமறைவாக இருப்பதற்கு. யாருக்கும் பயப்பட தேவையில்லை. இன்னும் சிறிது நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க இருக்கிறது. நீங்களும் அதில் கலந்து கொள்ளுங்கள் என கூறி, இணைப்பை துண்டித்துவிட்டார்.