Karunanithi visuals play in jaya tv

ஜெயலலிதாவின் ஆன்மா அந்த காட்சியை கண்டிருந்தால் என்ன செய்திருக்கும் என்பதை கற்பனை கூட செய்யமுடியவில்லை!


அப்டி என்னாச்சு? என்கிறீர்களா...பிரதமர் மோடி கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்ததை ‘கருணாநிதியிடம் உடல் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி’ என்று சப்டைட்டிலுடன் செய்தியாக ஒளிபரப்பியிருக்கிறது ஓய் ஜெயா பிளஸ் சேனல். இதைவிட பேரதிசயம் வேறென்ன வேணும்?!

ஜெயலலிதா இருந்த காலத்தில் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை கருணாநிதியை கரிச்சுக் கொட்டி, தாளிச்சுத் தட்டிக் கொண்டிருந்த ஜெயா குழும தொலைக்காட்சியில் இன்று ‘கோபாலபுரம் - சென்னை’ எனும் லொக்கேஷன் மார்க்குடன் தி.மு.க. பற்றிய ஒரு பாசிடீவ் செய்து ஒளிபரப்பாவது காலம் எவ்வளவு வலிது என்பதை நமக்கு உணர்த்துகிறது. 


கருணாநிதி ஆட்சி செய்த காலத்தில் அவரை ‘மைனாரிட்டி தி.மு.க. அரசு நடத்தும் கருணாநிதி’ எனவும், ஜெ., அரசாண்ட காலத்தில் ‘தீய சக்தி’ எனவும் விளித்த ஜெயா சானல் இன்று அவரை கருணாநிதி என காட்சிப்படுத்துகிறது. இது, ஜெயா குழும சேனல்களை நடத்தும் சசி - தினகரன் டீம் எந்தளவுக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்திருக்கிறார்கள், ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதை புரிந்திருக்கிறார்கள், எடப்பாடி - பன்னீர் அண்ட்கோவுக்கு ஆப்பு வைப்பதற்காக முரசொலியில் விளம்பரம் கூட கொடுக்கலாம் தவறில்லை! என முடிவெடுக்குமளவுக்கு போவார்கள் என்பதையும் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கலகலக்கிறார்கள்.

தங்கள் அரசை கவிழ்ப்பதற்காக ஸ்டாலினோடு ரகசிய கூட்டில் தினகரன் இருக்கிறார் என்று எடப்பாடி டீம் செய்யும் விமர்சனத்துக்கு இந்த காட்சி எந்தளவுக்கு உதவி செய்யும் என்பது போகப்போக புரியும். 


ஆனால் தினகரன் தரப்போ ‘அம்மா அவர்கள் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஸ்டாலின் அவரை காண வந்தார். ராஜாத்தியம்மாளும் வந்தார். அம்மாவின் இறுதி அஞ்சலியில் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆக அந்த நாகரிகத்துக்கு மரியாதை செய்யும் வகையில் பதில் நாகரிகம் இது. உடல் சுகவீனமான கருணாநிதியை பிரதமர் பார்த்தது எங்களுக்கு ஒரு செய்தி. கருணாநிதி முக்கியமில்லை, பிரதமர் நிகழ்வு முக்கியமென்பதால் அதை காட்டினோம்.” என்கின்றனர்.
நம்பிட்டோம், நம்பிட்டோம், நம்பித்தானே ஆகணும்!