சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு திடீரென திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

சென்னை கோடம்பாகத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முரசொலி வளாகத்தில் வருகிற 7-ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். இதில் பங்கேற்க பல்வேறு தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.  

இந்நிலையில், சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மேடைக்கு மேடை கடுமையாக விமர்சித்த போதிலும் கமலுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.