கைதுக்கு அஞ்சும் மக்கள் நாங்கள் இல்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பாவை நீக்க கோரி தி.மு.க. இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும்27 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர் சிறப்பு அந்தஸ்து எனும் பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் பிடியில் சேர்க்க முயற்சிக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை  நீக்க வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் சர்தார் பட்டேல் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கல்வி எங்கள் ஆயுதம், கழகம் எங்கள் கேடயம், துணைவேந்தரா ? துரோகி வேந்தரா ? சூரப்பனா எட்டப்பனா ?
இது கல்விப்பூஞ்சோலை இங்கு காவிக்கென்ன வேலை, அண்ணா பல்கலைக்கழகம் அந்நியர்களுக்கா ? போராடு போராடு கல்வி உரிமை காக்கப் போராடு, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்து கொண்டு, இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக நிற்கிற சூரப்பாவை கண்டிக்கிறோம், என முழக்கமிட்டனர். 

மேலும் எங்கள் நாடு தமிழ்நாடு சூரப்பாவே வெளியேறு, பறிக்காதே பறிக்காதே இட ஒதுக்கீடு எங்கள் உரிமை மோடி அரசே பறிக்காதே, அண்ணா பல்கலைக்கழகத்தை மாநில அரசிடம் இருந்து பறிக்காதே என்று மத்திய மாநில அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை  திமுகவினர் எழுப்பினர். பின்னர், மேடையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :-நம்முடைய வீட்டு பிள்ளைகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க கூடாது என்று காவி கும்பல் முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால் போலீசார் கைது செய்வார்கள் என்று சொன்னார்கள். கைத்திற்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல.  இஸ்ரோவில் வேலை செய்யவர்களை தயாரிக்க கூடிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அப்படி இருக்கும்போது எதற்காக சிறப்பு அந்தஸ்து. மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து  வழங்கினால், பொறியியல் படிப்பதற்கு மாணவர்கள்  வருடத்துக்கு 2 லட்சம் தேவைப்படும். 

இந்த திட்டத்தை கைவிடா விட்டால் போராட்டம் தொடரும். இது முதல் போராட்டம்  தான். வருகின்றன காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக சூரப்பா நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சூரப்பாவிற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்.அண்ணா பல்கலைக்கழகத்தை அதிமுக அரசு, மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார்கள் என்றும்  கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்...