திடீர் உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சை முடிந்து இன்றே வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துமனை டாக்டர்கள் அவரது வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனால்  கருணாநிதி எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அவ்வப்போது அவரது புகைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கு தொண்டைப் பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக் குழாயை மாற்றுவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மாற்றியபின் இன்றே அவர் வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.