தெலுங்கிலிருந்து வந்தாலும் கருணாநிதி தமிழர். கன்னடத்தில் இருந்து வந்த ரஜினியை தமிழராக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’சினிமாவில் யார் வேண்டாம் நடிக்கலாம். புகழ் பெறலாம். அரசியலுக்கு கூட வரலாம். வந்து பத்து, பதினைந்து வருடம் பணிபுரிந்து மக்களுக்காக, மக்கள் பிரச்சினைகளுக்காக துன்பங்களை அனுபவித்து அடித்தட்டு மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து அதன்பின் அரசியலுக்கு வரவேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இனம் தமிழினம். அந்த பெரும்பான்மை இனத்தை ஆள்வதற்கு தமிழனாக தான் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் திமுக தலைவர் கருணாநிதியை நான் தெலுங்கராகப் பார்க்கவில்லை. காரணம் அவர்கள் வீட்டில் பேசுவது தமிழ் தான். தமிழில்தான் அவர்களது குடும்பத்தினர் பேசுகிறார்கள்.  எனக்கு தெரிந்து அனைவரும் தமிழ் பேசுகிறார்கள்.

ஆனால், ரஜினி  வீட்டில் மராட்டியம் தான் பேசுகிறார்கள். மராட்டிய மன்னர் சிவாஜி படம் தான் அவரது வீட்டில் இருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு இந்த மண்ணில் தங்களுடைய வாழ்வு, வளம், வாழ்க்கை, வேலைவாய்ப்பு, முதலீடு எல்லாவற்றையும் இரண்டறக் கலந்து இந்த மண்ணில் வாழ்கின்ற அவர்களை நாங்கள் தமிழர்களாக தான் பார்க்கிறோம். கால் நூற்றாண்டு காலமாக திமுக தலைவர் வீட்டில் எனக்கு நட்பு உண்டு.

 அவர்களின் வீட்டில் யாரும் தெலுங்கு பேசுவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் தமிழரில்லை எனச் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் ஐந்து தலைமுறைகளுக்கு மேல் திருவாரூரில் குடியேறியவர்கள். அவர்களை தமிழரில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ரஜினி 1972ம் ஆண்டுக்கு பிறகு தமிழகம் வந்தவர். கருணாநிதி குடும்பம் பல நூறு ஆண்டுகளாக இங்கே தான் இருக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களை நான் தமிழர்களாத்தான் பார்க்கிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.