கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, கருணாநிதியின் மறைவிற்கு பிறகு மீண்டும் கட்சியில் பதவியை பெற தீவிரம் காட்டிவரும் நிலையில், அழகிரியின் நீக்கம் குறித்தும் அவரது பேச்சை திமுகவினர் பொருட்படுத்த வேண்டாம் என்றும் கருணாநிதி கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை, தற்போது சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. 

கடந்த 2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு முன்னதாக தென்மண்டல திமுக பொறுப்பாளராக அழகிரி இருந்துவந்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, கட்சி செயல்பாடுகளில் அழகிரி ஈடுபடவில்லை என்றாலும், அவருக்கு அதிருப்தி இருந்துவந்தது. 

இந்நிலையில், கருணாநிதியின் மறைவிற்கு பிறகு மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பை பெறும் முனைப்பில் உள்ள அழகிரி, தனது மகனுக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாளை திமுக செயற்குழு கூட்டம் கூட உள்ளது. அந்த கூட்டத்தில் ஸ்டாலின், திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளைய செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவுக்கான தேதியும் இறுதி செய்யப்பட உள்ளது. 

இந்த நிலையில், இன்று மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில், தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் அழகிரி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தந்தையிடம் எனது ஆதங்கத்தை தெரிவித்தேன். கட்சி தொடர்பான ஆதங்கம் தான் அது. குடும்பம் தொடர்பானது அல்ல என்பதை தெளிவுபடுத்தினார். மேலும் திமுகவின் தொண்டர்களும் கருணாநிதியின் விசுவாசிகளும் தன் பக்கமே உள்ளதாகவும் திமுகவில் தற்போது இல்லாததால், செயற்குழு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அழகிரி தெரிவித்தார். 

அழகிரியின் இந்த பேட்டியால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அழகிரியை மீண்டும் கட்சியில் இணைத்து பதவி வழங்கக்கூடாது என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அழகிரியின் அதிரடியான பேட்டிகளால், திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், 2016ம் ஆண்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்று வைரலாகிவருகிறது. அதில், கழக கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதற்காக ஏற்கனவே கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகிரி, கட்சியின் வளர்ச்சியை கெடுக்கும் வகையிலும் கழகத்தின் வளர்ச்சியை குலைப்பதற்காகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு அறிக்கை வெளியிட்டும் பேட்டி கொடுத்தும் வருகிறார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் கூட்டணி குறித்து, இரண்டு கட்சிகளுக்கும் கொள்கையே இல்லை என்றும் அதிமுகவை எந்த கூட்டணியும் வெல்ல முடியாது எனவும் பேட்டி அளித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அவர் செய்துவரும் துரோகத்திற்கு என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே கழக தோழர்கள், அழகிரி தெரிவித்துவரும் கருத்துகளை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்த வேண்டுகிறேன் என கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.