தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. அவர் நினைவிடத்தில் இன்றுவரை மக்கள் கூட்டம் தினமும் வந்து செல்கிறது. திமுகவினரும் கருணாநிதியின் விசுவாசிகளும், பொதுமக்களும் அவர் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தலைவனை இழந்த தொண்டர் முரளிதரன் என்பவர் தனது தலைவனின் கெத்தை பற்றி தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள உருக்கமான பதிவில்; இதே நாளில் சென்ற ஆண்டு அந்த துக்க நிகழ்வை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.

அதற்கு முன்பு நான் கண்ட இயக்கத் தலைவர்களின் இறப்பு எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதை சிறிது அசை போட்டுவிடலாம்.

1984. பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்டு கொல்லப்பட்டபோது நடந்த வன்முறைகள் நாடறியும். ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தினரை கொத்து கொத்தாக கொன்று குவித்ததை இன்றும் மறக்க முடியாது.

1987. முதல்வராக எம்ஜிஆர் மரணித்த போது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் ஏராளம். எம்ஜிஆர் என்ற நடிகரை திராவிட இயக்கத்துக்குள், கட்சிக்குள், அழைத்து வந்தவரின் சிலை என்று கூட தெரியாமல் அதை நொறுக்கி தங்களது 'துக்கத்தை' வெளிப்படுத்தியது அநாகரீகத்தின் உச்சம். அதைவிட அநாகரீகம் அந்த இடத்திலேயே எம்ஜிஆருக்கு சிலை நிறுவியதும். இது அவர்களது குணத்தை வெளிப்படுத்தியது.

1991. ராஜீவ் படுகொலை. எந்தவிதத்திலும் சம்மந்தமே இல்லாமல் திமுக கட்சிக்காரர்களின் வீடுகளை அதிமுகவினரோடு காங்கிரஸ் கட்சியினரும் சமூக விரோதிகளும் செய்த அட்டகாசங்களை இன்று நினைத்தாலும் நடுக்கம் வரும். இத்தனைக்கும் விடுதலைப்புலிகளை ஆதரித்தால் தமிழர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டனர்.

2016. அம்மையார் ஜெயலலிதா இறந்த போது காலம் நிறைய மாற்றங்களை கொண்டுவந்து தமிழகத்தில் ஒரு இடத்திலும் எவ்வித அராஜக போக்குகளை பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும் அந்த நாளில் ஒரு பயணத்தில் தேனியில் இருந்தேன். மக்கள் ஆங்காங்கே அமைதி ஊர்வலமாக சென்றனர்.

2018. திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, நிச்சயம் திரும்ப வீட்டுக்கு அழைத்துவரப்படுவார் என்று அறிந்திருந்தவர்களுக்கு திரும்ப உயிரற்று வந்ததும் பெரிய அளவில் வன்முறைகள் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

பிரியாணி கடை, பியூடி பார்லர்களில் ஏதாவது கயவர்கள் செய்ததை பெரிதாக படம் பிடித்து போடுபவர்கள் நிச்சயம் கலைஞர் மரணத்தின் போது வன்முறை வெடிக்கும் என்று நினைத்தவர்களுக்கு ஆச்சரியம். எங்குமே பேருந்து கொளுத்தினர், கல்வீச்சு, கடைகள் சூறையாடல் என்று எதுவுமே அரங்கேறவில்லை.

ஆனாலும் ஆட்சியாளர்கள், ஏதாவது ஒரு வகையில் திமுகவினரால் அட்டூழியம் நடந்திட பெரு முயற்சிகள் எடுத்ததை அவரது உடலை அடக்கம் செய்யும் போது நடக்கும் என்று வஞ்சக வலை வீசி, அதில் குளிர் காய நினைத்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தால் முக்குடைப்பு நடந்தது.

உடன்பிறப்புக்கள் கண்ணியம் காத்து தங்களது தலைவனுக்கு மெய்யான அஞ்சலி செலுத்தியது போற்றுதலுக்கு உரியது.

அதோடு, அன்று மாநிலத்தில் அனைத்து பெட்ரோல் பங்குகளும் வேறு ஒரு கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தை அறிவித்தும், சென்னையில் இறுதி ஊர்வலத்தில் வங்கக்கடலே ராஜாஜி ஹாலில் வந்துவிடும் அளவிற்கு மக்கள் கடல். பெருபாலும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 7 வரை காவேரியில் கலைஞர் படுத்துக்கொண்டே தான் செய்த சாதனைகளை, எந்த தொலைக்காட்சிகள் திமுகவும், அதிமுகவும் ஒன்று என்று கோபுரத்தையும் குப்பையும் சரி நிகர் சமமாக பாவித்து பேசிவந்ததோ, அதே ஊடகங்கள் (தங்கள் சுய லாபத்திற்காகவே) கலைஞரின் வாழ்க்கையை, அவர் கடந்து வந்த பாதையை, யாருமே செய்யாத சாதனைகளை படம் போட்டு காட்டியதோ, அன்றே பலருக்கு, இது இவரா செய்தது ? என்று மூக்கின் மேல் விரல் வைத்ததை கண்டோமே ?

14 வயது முதல் வாழ்க்கையே போராட்டம் என்று இருந்த மாபெரும் தலைவரை, 94 வயதில் வாழ்ந்து முடித்த பின்னும் போராட வைத்தது தான் காலத்தின் கோலம். இருப்பினும் வழக்கம் போல் அதிலும் வென்று இதோ ஓராண்டு ஆகியும் அவரைப் பற்றி பேசாத நாட்களே இல்லை.

திரைத்துறை, ஊடகத்துறை, இலக்கியவாதிகள், தொழிலதிபர்கள், நீதியரசர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் என அவரால் எங்கோ எப்போதோ அவரோடு பயணித்த. பணி புரிந்த, பயனடைந்த ஒருவர் பேசிக்கொண்டே இருந்தார். சுமார் 100 நாட்களை தாண்டியும் அவர் பேசப்பட்டு வந்தார். அறிவில் சிறந்த பேராளுமை கொண்ட தலைவர் அனைவரையும் உணர்ச்சி வயப்பட்ட வைத்ததை நாம் கண்டோமே ?

முன்னாள் குடியரசு தலைவர், முன்னாள் பிரதமர் போன்றவர் மறைந்து போனால் இரங்கல் தெரிவிப்பது நடைமுறையில் உள்ள வாடிக்கை ஆனால் ஒரு மாநிலத்தில் எதிர்கட்சி தலைவர் பதவியில் கூட வகிக்காத ஒருவர் இழப்புக்கு நமது நாடும், மற்ற மாநிலங்களிலும் பொது விடுமுறை விட்டதென்பது மிக மிக அரியது.

இதை எல்லாம் விட அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதை எப்படி மறக்க முடியும்?

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று.

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

தனது பேனாவின் பல ஒற்றை கையெழுத்தால் பல லட்சக்கணக்கான வாழ்வில் முன்னேற்றம் தந்த உங்கள் புகழ் தமிழ் உள்ளவரை, தமிழன் உள்ளவரை தமிழ் நாடு மறக்காது.

வாழ்க கலைஞர், வளர்க கலைஞர் புகழ். நினைவு போற்றுவோம். என தனது முகநூல் பக்கத்தில் இந்த உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.