கடந்த சில மாதங்களுக்கு கருணாநிதியை அவரது இல்லத்தில் பிரமர் மோடி சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில் தமிழகம் வந்துள்ள மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்போவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. 

மேலும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிராக போராட்டக்காரர்கள் கருப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர்களின் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, கருப்பு சட்டை அணிந்து, மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கருப்பு சட்டையுடனும், மஞ்சள் துண்டுடனும் உள்ள புகைப்படம் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதி கருப்பு சட்டை அணிந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரது புகைப்படத்தைப் பார்க்கும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.