திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையை பாடமாக சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டியளித்துள்ளார். கருணாநிதி படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் அரசு ஒருபோதும் தடையாக இருக்காது என்றும் கூறியுள்ளார். 

கருணாநிதி கடந்த 7-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 14 பிரதமர்களை கண்ட பெருமைக்குரிய தலைவர். உலக தலைவர்களால் போற்றப்பட்டவர். அரசியல் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஏராளம். இந்நிலையில் கருணாநிதியின் நூல்கள் அரசுடமை ஆக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்து வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையை பாடமாக சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என்றார். கருணாநிதியின் படைப்புகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்ல அதிமுக அரசு எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.