மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் என புதிய குண்டை தூக்கிப்போட்டுள்ளார் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை.

ஜெயலலிதா மரணத்திற்கு பாஜக தான் காரணம் என சசிகலா தரப்பு சிறையில் புலம்பியதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது இந்த நிலையில், கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் அவர் மீது திமுக தொடர்ந்த வழக்குதான். கருணாநிதியும், ஆர்.எஸ்.பாரதியும்தான் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளினார்கள். அதற்கு உடந்தையாய் இருந்தது காங்கிரஸ்.

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது மிகவும் சிரமப்பட்டார். ஆனால், அப்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஜெயலலிதா வழக்கை எதிர்த்து மேல்முறையீட்டுக்கும் சென்றது. அந்த உளைச்சல் மற்றும் பாதிப்பின் காரணமாகத்தான் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே ஜெயலலிதா இறந்ததற்கு முழுக் காரணமும், திமுகவும் காங்கிரஸும்தான்” என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் சசிகலாவும் அவரது குடும்பத்தினருமே என்று எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவருகின்றனர். ஆனால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் திமுகவும் காங்கிரஸும்தான் என்று தம்பிதுரை வேறு விதமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.