திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறுநீரக பாதை தொற்று காரணமாக அவருக்கு வந்துள்ள காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நல்ககுறைவு ஏற்பட்டதாகவும், அவர் சீரியஸாக இருப்பதாகவும் தகவல் பரவியது. தமிழகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவருக்கு லோசான காய்ச்சல் மட்டும் இருப்பதாகவும், மற்றபடி அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வரும் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதியின்  உடல் நலத்தில் வயதின் காரணமாக  நலிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை  பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் எனவும் கருணாநிதிக்கு சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் , கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.