திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 28-ம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். கருணாநிதிக்கு 10-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கடைசியாக ஜூலை 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 6 நாட்களாகியும் இன்னும் காவேரி மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது உண்மையே என திருநாவுக்கரசர் தகவல் தெரிவித்திருந்தார்.அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன். கருணாநிதிக்கு மருத்துவக் குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார். கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதும் சிகிச்சைக்கு பிறகு சீராக்கப்படுவதும் கடந்த சில நாட்களாகவே இருக்கும் நிலைதான் என்று, திருநாவுக்கரசர் கூறினார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இன்று மாலை 6 மணிக்கு காவேரி மருத்துவமனை சார்பில் கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.