திமுக தலைவர் கருணாநிதியின்  உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், 40 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கருணாநிதியின் உறவினர்கள் என ஏராளமானோர் காவேரி மருத்துவமனையில் சோகத்துடன் குவிந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து அடுத்து வெளிவரப்போகும் அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றன.

இந்த நிலையில்  கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக நேற்று  பிற்பகலில் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனை காவேரி மருத்துவமனையும் உறுதி செய்தது. அவரது வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது என்றும் . தற்போது தரப்பட்டு வரும் இந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்த  அரசியல் கட்சியினரும் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிய தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொண்டர்கள்   வா வா தலைவா, கலைஞர் வாழ்க என விடிய விடிய கோஷமிட்டபடியே இருந்தனர். இன்று  காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, செல்வி, ஆ.ராசா உள்ளிட்டோர் வருகை தந்தார்.  கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், எ.வ.வேலு, வைகோ மா.சுப்பிரமணியம், உதயநிதி ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் கருணாநிதியின்  உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள்  தொடர்ந்து கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான முறையில் இருப்பதால் தமிழகம் முழுவதும் இருந்து திமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என  அனைவரும் மருத்துவமனை முன்பு திரண்டுள்ளனர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் உறவினர்களும் மருத்துவமனையில் இருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.