முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று தன்னுடைய பணியினை தொடர்கின்ற வரையில், தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட சட்டப்படி எடுக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரண்டொரு நாட்களில் இல்லம் திரும்பி விடுவார் என்று கூறப்பட்ட முதலமைச்சரின் உடல் நிலையில் அன்றாடம் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அவர் முழு நலம் பெற்று இல்லம் திரும்பி முதலமைச்சர் பணிகளை ஆற்ற இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை கூறுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரிப் பிரச்சனை போன்ற மிக முக்கியமான பிரச்சனையில் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையிலே இருக்கின்ற காரணத்தால்,அவரிடம் கலந்து கொள்ளாமல், எந்த முடிவும் எடுக்க அமைச்சர்களோ, தலைமைச் செயலாளரோ தயாராக இல்லாத காரணத்தால், ஒரு செயலற்ற நிலைமை தான் தமிழகத்திலே உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தனித்தனியாக பல்வேறு பிரச்சனைகள் குறித்து அறிக்கைகளைக் கொடுத்து வருகிறார்கள். அதுபற்றியெல்லாம் முடிவெடுத்து, அரசின் நிலை அவ்வப்போது மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

இதுபற்றி மத்திய அரசோ, தமிழக ஆளுநரோ முடிவெடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பது தான் தமிழ் நாட்டு மக்களின் விருப்பம்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று தன்னுடைய பணியினை தொடர்கின்ற வரையில், தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட உரிய ஏற்பாடுகள் முறைப்படி, சட்டப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள், நாட்டு மக்களின் வேண்டுகோள் என திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.