முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று  மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  

இந்த விழாவிற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கட்சி சார்ந்த சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே நேரம் ஒதுக்கியதால் மதுரை செல்கிறார். மதுரையில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை மீண்டும் கமல்ஹாசன் சென்னை திரும்புகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் ரஜினி மற்றும் கமல் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கமல் மேடையில் அமர்ந்திருந்தார். ரஜினி மேடையின் கீழ் பார்வையாளராக அமர்ந்திருந்தார். அப்போது கமலுக்கும் திமுகவுக்கும் இணக்கமான சூழல் நிலவி வந்தது. அதன் பிறகு அதிமுக அமைச்சர்களை கடுமையாக சாடி வந்தார் கமல்ஹாசன். இதனையடுத்து கமலஹாசனை ஸ்டாலின் பின்னிருந்து இயக்குவதாக அரசியல் நோக்கர்கள் கருதினர். இந்நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கப் போவதில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.