திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த கருணாநிதியின் சிலை, நவம்பர் 15-ஆம் தேதி அன்று திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு திமுக அழைப்பு விடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

திமுக தலைவராக இருந்தவரும், தமிழகத்தின் 5 முறை முதலமைச்சராக இருந்தவருமான கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி அன்று காலமானார். கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சாமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வெண்கல சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

இதை அடுத்து, கருணாநிதியின் சிலையை, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார். கருணாநிதி சிலை வடிவமைக்கும் போது இரண்டு முறை, சென்று பார்த்தார் மு.க.ஸ்டாலின். அப்போது சில திருத்தங்களை ஸ்டாலின் கூறியதை அடுத்து சிலை நிறைவடையும் நிலையில் உள்ளது.  சிலை முழு உரு பெற்றவுடன், அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலை அருகே அமைக்கும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் திமுக தரப்பில் நேரம் கேட்டதாக தெரிகிறது. சோனியாவிற்கு உடல்நலம் சற்று சரியில்லாத காரணத்தால் அவருக்குப் பதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் இரண்டாவது வாரத்தில், அண்ணா அறிவாலயத்தில் மறைந்த கருணாநிதியின் திருவுருவ சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.