karunanidhi ask about anbazhagan to kanimozhi

கடந்த 7 ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், போதிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பால், காங்கிரஸ் மற்றும் திமுக மீதான ஊழல் கறைகள் துடைக்கப்பட்டு தாங்கள் சுத்தமானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக காங்கிரஸாரும் திமுகவினரும் கொண்டாடிவருகின்றனர். 

2011-ல் தமிழகத்தில் திமுக படுதோல்வி அடைந்ததற்கும், 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததற்கும் 2ஜி முறைகேடு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்நிலையில், 2ஜி வழக்கின் தீர்ப்பின்மூலம் தங்களின் மீது தவறு இல்லை என்பதை அடிப்படையாக வைத்து மத்தியில் காங்கிரஸும் தமிழகத்தில் திமுகவும் மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே பணிகளை தொடங்கிவிட்டன.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக நமது ஆட்சிதான் அமையும் என திமுகவினர் உயர்மட்ட தலைவர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

இந்நிலையில், நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுதலை பெற்ற ஆ.ராசாவும் கனிமொழியும் டெல்லியிலிருந்து இன்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் நேரில் சென்று அவர்களை அழைத்து சென்றனர். 

விமான நிலையத்திலிருந்து நேராக கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற கனிமொழியும் ராசாவும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மகள் கனிமொழியின் கன்னத்தில் முத்தமிட்டு பாசத்தை கருணாநிதி பகிர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. 

அதன்பிறகு அதையே மிஞ்சும் அளவுக்கு மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. கருணாநிதியின் அருகே சென்று அப்பா என அழைத்த கனிமொழி, திடீரென பேராசிரியரா? இதோ இருக்கிறார் என அவரை கருணாநிதியிடம் காட்டினார். இதன்மூலம் பேராசிரியர் அன்பழகன் எங்கே என கனிமொழியிடம் கருணாநிதி கேட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திமுக பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியின் நெருங்கிய நண்பராகவும் இருந்துவருபவர் அன்பழகன்.

வயது முதிர்வால், உடனடியாக விஷயங்களை புரிந்துகொள்ளும் மற்றும் கேட்கும் திறன் குறைந்துவிட்ட இந்த தருணத்திலும் அன்பழகன் எங்கே என நினைவுடன் அவர் கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியான தருணத்தின் உச்சம் என்றே கூற வேண்டும்.