Karunanidhi - Modi meeting will not have any impact on 2G case
தி.மு.க தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தை, பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கருணாநிதி - மோடி சந்திப்பால் 2ஜி வழக்கில் எந்த தாக்கமும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தினத்தந்தி பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் கருணாநிதியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின்னர், பிரதமர் மோடி கருணாநிதியின் இல்லத்தில் இருந்து கிளம்பினார்.
திமுக தலைவர் கருணாநிதியை மூத்த தலைவர் என்ற முறையில் மோடி சந்தித்ததாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். மனிதாபிமான அடிப்படையிலேயே பிரதமர் மோடி,
கருணாநிதியைச் சந்தித்ததாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கருணாநிதி - மோடி சந்திப்பு குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். செய்தியாளர்களின் சந்திப்பின்போது சு.சுவாமி, மயிலாப்பூரில் இருக்கும் அறிவு ஜீவிகளின் ஆலோசனைப்படித்தான் கருணாநிதியை மோடி சந்தித்ததாக கூறினார். கருணாநிதியை, மோடி சந்தித்தாலும், 2ஜி வழக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.
வழக்கின் தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்பதால் அவகாசம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்றும், வழக்கில் ஆ.ராசாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், நிச்சயமாக உச்சநீதிமன்றம் செல்வேன் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
