திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கலந்து கொண்ட கூட்டங்களில் அறிவுப்பூர்வமாகவும், நகைச்சுவையுடனும் பேசிய பல பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தான் இருக்கும் இடம் எப்படி இருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும்  அந்த இடத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் கருணாநிதிக்கு நிகர் யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அப்படி ஒரு சம்பவம் சென்னை பச்சையப்பா கல்லுரியில் நடைபெற்றது.

பச்சையப்பா கல்லூரி… அது ஒரு  இலக்கிய விழா… அதில் திமுக தலைவர் கருணாநிதி முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அது தேர்தல் நடக்கும் நேரம் என்பதால் மிகுந்த பரபரப்புக்கிடையே கருணாநிதி பேச அழைக்கப்பட்டிருந்தார்.  திமுக ஒரு அணியிலும், காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரணியிலும் இருந்தன.

இலக்கிய விழா என்பதால் மேடையில் அரசியல் பேசக்கூடாது என்று கருணாநிதியிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெளிவாக கூறி விட்டனர். மேடையில் தனது உரையைத் தொடங்கிய கருணாநிதி காதல் ரசம் சொட்ட, சொட்ட பேசினார். மாணவர்கள், பொது மக்கள் என அங்கிருந்த அனைவரும் அவரது பேச்சை ரசித்துக் கேட்டனர்.

இலக்கிய உரையை நிகழ்த்தி  பேச்சின்  இறுதிக்கு வந்த கருணாநிதி, உரையை முடிக்கும் முன்பாக, தேர்தல் வரவிருக்கிறது என தொடங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒரு நொடி  அதிர்ந்து போயினர். என்னய்யா இந்த ஆள அரசியல் பேசக் கூடாது என சொல்லியிருந்தோமே… அப்படி இருந்தும் அரசியல் பேசத் தொடங்கி விட்டாரே என்று கவலைப்படத் தொடங்கினர்.

அப்போது கருணாநிதி இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது… என்றார்.. ஒரு நொடி தனது பேச்சை  நிறுத்திய அவர்…. உணவருந்தி முடிந்ததும் அனைவரும் இலையை  தூர போட்டு விட்டு  கையை கழுவி விடுங்கள் என்றாரே  பார்க்கலாம்’ அரங்கமே எழுந்து நின்று கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தது.

நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலையை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசின் கை சின்னத்தை கழுவி விடுங்கள் என்று  நாசூக்காக சொல்லி  முடித்தார்.  இப்படித்தான் தான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்பவர் கருணாநிதி என்கின்றனர் திமுகவினர்.

அது போல்தான் உடல் நலம் குன்றி மோசமான சூழ்நிலையிலும் அவரிடம் இருக்கும் அந்தத்தனித் தன்மையால் இன்று மீண்டும் சக்கர நாற்காலியில் ஏறி அமரும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் என சிலாகித்துச் சொல்கின்றனர் திமுக தொண்டர்கள்.