தமிழகத்தில் திமுக தலைவராக இருந்த கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் மரணம் அடைந்தனர். இதையடுத்து தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அனைவரும் கருத்த தெரிவித்தனர்.

அதிமுக இரண்டாக உடைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும் உருவானது. ஆனால் முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் சென்று கட்சியைக் காப்பாற்றி வருகிறார். அவருக்கு பாஜகவின் மத்திய அரசு உதவியாக இருந்து வருகிறது.

ஆனாலும் டி.டி.வி.தினகரன், எடப்பாடிக்கு சிம்ம சொப்பனமாகவே  இருந்து வருகிறார். திமுகவைப் பொறுத்தவரை கட்சி பலமாக இருந்தாலும் கருணாநிதியின் ஆளுமைத் திறன் ஸ்டாலினிடம் இல்லை என்று அந்தக் கட்சித் தொண்டர்களே கூறி வருகின்றனர்.

இந்நிலையில்தான் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.  கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லா ஒரு பொதுத் தேர்தல் எப்படி இருக்கப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே வேலுார் மத்திய மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. அதில்பங்கேற்றுப் பேசிய அக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடப்பதால், இந்த தேர்தல், முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என தெரிவித்தார்.

ஒரு பக்கம் மோடியும், அ.தி.மு.க.,வும் கூட்டணி வைத்துள்ளனர். நாம் ஜனநாயக ரீதியில் கூட்டணி வைத்துள்ளோம். இரு கட்சிகளுக்கும், இந்த தேர்தல் வாழ்வா, சாவா என்ற நிலை தான். நாம் வெற்றி பெற்றால், அடுத்த, 25 ஆண்டுகள், தி.மு.க., ஆட்சி நடக்கும். டெல்லியையும் கைப்பற்றி விடுவோம் என தெரிவித்தார். துரை முருகனின் பேச்சு திமுக தொண்டர்களை யோசிக்க வைத்துள்ளது.