ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கைது நடவடிக்கை சிதம்பரத்துடன் நிறுத்தாமல் அவரை குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் தூக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரம் சிறை சென்று தற்போது ஜாமீனில் உள்ளார். 

இந்நிலையில், வருமான வரித்துறை சம்பந்தமான ஒரு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தையும் அவர் மனைவி ஸ்ரீநிதியையும் நெருங்கி வருகிறது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காட்டுல இருந்த ஒரு நிலம் விற்கப்பட்டுள்ளது. அதில் விற்பனைத் தொகையைக் குறைச்சிக் காட்டி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா வருமான வரித்துறை தொடுத்த ஒரு வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, கார்த்தி சிதம்பரம் தற்போது சிவகங்கை தொகுதி எம்.பி.யாக உள்ளார். ஆகையால், இந்த வழக்கை மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றம்தான், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீதான ஒரு கிரிமினல் வழக்கில் அவருக்குத் தண்டனை கொடுத்து, அவருடைய அமைச்சர் பதவிக்கு ஆப்பு வைத்தது. 

அதனால் இந்த சிறப்பு நீதிமன்றம் தன்னைச் சிறையில் தள்ளிவிடுமோ என்று பயந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், வரி ஏய்ப்பு வழக்கு என் மீது தொடரப்பட்ட காலத்தில், நான் மக்கள் பிரதிநிதியாக இல்லை. அதனால் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதற்கு விளக்கம் அளிக்கக் கோரி வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருந்தாலும் எந்த நேரத்திலும் சிவகங்கை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.