ஏர்செல் – மேக்ஸிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தில் மகன் கார்த்திக்கின் முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்க துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம், ஜாமினில் வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், கார்த்தியை கைது செய்யவும், அமலாக்க துறை தீவிரம் காட்டி வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம்,  கடந்த, 2006ல், மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது, ஆசிய நாடான, மலேஷியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில், 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியது.

மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் ஒப்புதல் பெறாமல், விதிமுறைகளை மீறி, மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. 

இந்த அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில், கார்த்தியின் நிறுவனம் பலன் அடைந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ.,யும், அமலாக்க துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றன. விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ.,யும், இதில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்க துறையும் விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த வழக்கில், தாங்கள் கைதாவதை தவிர்ப்பதற்காக, சிதம்பரமும், கார்த்தியும், முன் ஜாமின் கோரி, டெல்லி சி.பி.ஐ,, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இதை விசாரித்த நீதிமன்றம், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் பணத்தின் அளவு, மிக குறைந்த தொகையாக இருப்பதை காரணம் காட்டி, இருவருக்கும் முன் ஜாமின் அளித்து உத்தரவிட்டது. 

இதற்கிடையே, 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், சி.பி.ஐ.,யால், சிதம்பரம், கடந்த ஆகஸ்ட், 21ல் கைது செய்யப்பட்டார். தற்போது, அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில், சிதம்பரத்துக்கும், கார்த்திக்கும் அளிக்கப்பட்ட முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்க துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.என்.எக்ஸ்., முறைகேடு வழக்கில், சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்ட நீதிமன்ற காவல், வரும், 17ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், சிதம்பரத்தின் முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டால், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு, அவர், சிறையிலிருந்து வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இதே போல் . சிதம்பரத்தின் மகன் கார்த்தியிடம், அமலாக்க துறை அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்க துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டால், கார்த்தியை, அமலாக்க துறை கைது செய்யும் சூழல் ஏற்படும்.