கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படுவாரா?.... 2-வது முறையாக சி.பி.ஐ. விசாரணை
 

அன்னிய முதலீட்டுக்கான அனுமதி வழங்கிய விவகார முறைகேடு குறித்து கார்த்தி சிதம்பரத்திடம் இன்று 2-வது முறையாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முதலீட்டுக்கான அனுமதி வழங்கியதில் முறைகேடு தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி அவரை ‘கண்காணிக்கப்படும் நபரா’க அறிவித்து ‘லுக்அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்தது. அதற்கு சென்னை ஐகோர்ட்டில் கார்த்திசிதம்பரம் தடை உத்தரவு பெற்றார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ‘லுக்அவுட்’ நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் அவர் விசாரனைக்காக சி.பி.ஐ. முன்பு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 23-ந் தேதி டெல்லியில் உள்ள ஐ.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. போலீசார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு ஆஜராகும்படி உத்தவிடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து நேற்று காலை 11.30 மணி அளவில் 2-வது முறையாக டெல்லி சி.பி.ஐ. முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.

அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் கூட்டாளிகள் என்று சந்தேகிக்கப்படும் பாஸ்கர்ராம், ரவி விஸ்வநாதன், மோகன் ராகேஷ் ஆகியோரும் நேற்று விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர். அவர்களிடமும் விசாரணை நடந்தது.