எனக்கு வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை என்றால், ஸ்விக்கி அல்லது ஜோமாடோ மூலம் ஆர்டர் செய்ய வேண்டும் என்று, சிபிஐ விசாரணை அதிகாரியிடம் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் 2007 இல் வெளிநாட்டில் இருந்து சுமார் 300 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. உரிய அனுமதியின்றி பெறப்பட்ட இந்த முதலீடு தொடர்பாக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள பிரச்சனையை தீர்த்து வைக்க லஞ்சம் பெற்றதாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 24 மணி நேர சி.பி.ஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இந்நிலையில், அவரை மேலும் 14 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்குமாறு சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ. வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில், ஒருநாள் காவலின்போது கார்த்தி சிதம்பரம் இருதய சிகிச்சை பிரிவில் இருந்ததால், எந்த தகவலையும் பெற முடியவில்லை என்று கூறினார்.

கார்த்தி தனது உடல் நிலை குறித்து எந்த புகாரும் கூறாத நிலையிலும் அவரை மருத்துவர்கள் இருதய நோய் பிரிவுக்கு மாற்றியது ஆச்சரியமளிப்பதாக சி.பி.ஐ. வழக்கறிஞர் கூறினார். முறைகேடு நிகழ்ந்த காலத்தில் Advantage Strategic Consulting நிறுவனத்திற்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான ஆவணங்கள் மற்றும் அந்நிறுவனத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் தொடர்பை உறுதிப்படுத்தும் 200க்கும் மேற்பட்ட  மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதாகவும் சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சம்மன் வழங்காமல் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக புகார் தெரிவித்தார்.  இதனையடுத்து கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அப்போது கார்த்தி சிதம்பரம் தனக்கு வீட்டு சாப்பாடு வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை நீதிபதி ஏற்கவில்லை. மருந்துகளை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதி அளித்தார். 

அப்போது வீட்டுச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால், சிபிஐ விசாரணை அதிகாரி, ஸ்விக்கி அல்லது ஜோமாடோ மூலம் உணவு ஆர்டர் செய்வார் என நம்புவதாக கார்த்தி கூறினார்.