ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கார்த்தி கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற, விதிகளை மீறி கார்த்தி உதவியதாகவும், அதற்கு கமிஷன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்லக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.இதை ரத்து செய்யக்கோரி, கார்த்தி சிதம்பரம்  தொடர்ந்த வழக்கில் அவரை வெளிநாடு செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

மேலும், வெளிநாட்டில் கார்த்தி சிதம்பரம் தங்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை சி.பி.ஐ.க்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது,   

 

இதே விவகாரம் தொடர்பாக கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பல தகவல்களைப் பெற்ற சிபிஐ அதிகாரிகள் அதன் அடிப்படையில் கார்த்தையை இன்று கைது செய்துள்ளனர்.இன்று காலைதான் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நிலையில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது