இன்றைக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கர்நாடகா மாநில சபாநாயகர் ரமேஷ் குமார் எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. இதனால், முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதம் கடந்த 18ம் தேதி தொடங்கியது. ஆனால், 4 நாட்கள் ஆகியும் குமாராசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்திவருகிறார்.
இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டார். ஆனால், குமாரசாமியோ மேலும் 2 நாட்கள் அவகாசம் கேட்டார். ஆனால், ’இந்த விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்க வேண்டாம். மேற்கொண்டு அவகாசம் அளிக்க முடியாது. இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்க முடியாது’ என சபாநாயகர் மறுத்துவிட்டார். இன்றே, பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று மீண்டும் உறுதியாக உத்தரவிட்டார்.
இதனையடுத்து, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சி உறுப்பினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில், “இன்றைக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தாவிட்டால் நான் ராஜினாமா செய்வேன்.” என்று சபாநாயகர் ரமேஷ்குமார் எச்சரித்துள்ளார். “ நான் இரவு 12 மணி வரையிலும் அவையை நடத்த தயாராக உள்ளேன். நீங்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். நான் எதிர்க்கட்சி தலைவரை பேச அழைக்காமல் எவ்வளவு நேரம் இருப்பது? நீங்கள், எவ்வளவுதான் கூச்சலிட்டாலும் நான் அவையை ஒத்திவைக்கமாட்டேன்” என்று ரமேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். எக்காரணம் கொண்டும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்று பாஜகவினரும் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.