டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதையடுத்தே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஒபிஎஸ் அணி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் எனவும் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்க வேண்டும் எனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

டிடிவியுடன் ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்துடன் கூட்டணி அமைக்க முயற்ச்சித்து வருகிறார். 

அதற்கு பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கைகள் முட்டுக்கட்டை போடவே தற்போது ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் ஜெவின் போயஸ்கார்டன் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் எனவும் அறிவித்தார். 

இதனிடையே மதுரை மேலூரில் பொதுக்கூட்டத்தை கூட்டிய டிடிவி தினகரன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பேசினார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதையடுத்தே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். 

மேலும், இரு அணிகள் இணைப்புக்காக வெறும் கண் துடைப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் எனவும், புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.