Hijab Row: பள்ளி மாணவி ஒருவர் ஹிஜாபை மாற்றி வர சொன்னதற்கு, ஹிஜாபை கழற்றி சீருடையில் தேர்வு எழுத விரும்பவில்லை என பதில் அளித்து இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மாணவி ஹிஜாபை கழற்றிவிட்டு பள்ளி சீருடையில் வந்த பின் தான் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அம்மாநில உயர் நீதிமன்றம் மார்ச் 15 ஆம் தேதி தடை விதித்தது. இஸ்லாம் மத நம்பிக்கைகளின் படி ஹிஜாப் அணுவது கட்டாயம் இல்லை என்றும் தீர்ப்பில் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக இன்றும் கர்நாடக மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடர்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு:
இன்று காலை கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் திட்டமிட்டப்படி துவங்கின. தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் ஈகோவை கழற்றி வைத்து விட்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு சீருடையில் வந்து தேர்வு எழுதுமாறு அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் ஏற்கனவே மாணவர்களிடம் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், "பள்ளி மாணவி ஒருவர் தேர்வில் கலந்து கொள்ள சாதாரண ஆடையை அணிந்து கொண்டு வந்தார். அவர் பள்ளி சீருடையை அணியாமல், ஹிஜாப் அணிந்து இருந்தார். நாங்கள் அவரிடம் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறி ஆலோசனை வழங்கினோம். பின் அவர் தனது உடையை மாற்றிக் கொண்டு வந்து பரிட்சை எழுதினார்," என மூத்த அரசு அதிகாரி தர்வாத் மோகன் குமார் தெரிவித்தார்.

தேர்வு எழுத விரும்பவில்லை:
இதேபோன்று பகல்கோட் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஹிஜாபை மாற்றி வர சொன்னதற்கு, ஹிஜாபை கழற்றி சீருடையில் தேர்வு எழுத விரும்பவில்லை என பதில் அளித்து இருக்கிறார். முன்னதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அர்கா நானேந்திரா விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
"விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் இருந்து நாங்கள் சமரசம் கொள்ள மாட்டோம். அனைவரும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் ஹிஜாபை கழற்றி வைத்து விட்டு தேர்வுகளை எழுத வேண்டும்," என அமைச்சர் நானேந்திரா தெரிவித்தார்.

நடவடிக்கை:
"அரசு விதிகளை மீறுவோர் மீது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். இதுபோன்ற சூழலுக்கு எந்த மாணவரும் இடம் தர மாட்டார்கள் என்று எனக்கு நம்பிக்கை உண்டு," என கர்நாடக மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் எந்த விதமான அச்சமும் இன்றி தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று துவங்கிய கர்நாடக மாநில எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 74 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு அம்மாநிலம் முழுக்க சுமார் 48 ஆயிரத்திற்கும் அதிக பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்து 440 மையங்களில் நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் 11 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
