கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்து புதிய ஆட்சி மலரும் என பாஜக எம்.பி. சுரேஷ் அங்கடி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அண்மையில் சித்தராமையா மீண்டும் நான் முதல்வராவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் நேற்று குமாரசாமி தலைமையில் நடக்கும் ஆட்சி எப்போது வேண்டுமானலும் கலைக்கப்படலாம் என அவரே தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் கர்நாடகாவில் 15 நாட்களில் கூட்டணி ஆட்சி கவிழும் என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கட்டாயப்படுத்தி நடத்தப்படும் திருமணம், நீண்ட நாட்கள் நிலைத்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே, முன்னாள் முதல்வர் சித்தராமையா  காலைவாரும் செயலில் ஈடுபட தொடங்கியுள்ளார் என பாஜக எம்.பி. சுரேஷ் அங்கடி கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தேவகவுடா பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சியினர் அளித்த ஆதரவை  திரும்பப்பெற்று துரோகம் செய்தனர். தேவகவுடாவுக்கு செய்த அதே துரோகத்தை காங்கிரசார் தற்போது குமாரசாமிக்கும் செய்ய உள்ளனர். கர்நாடகாவில் கூட்டணி  ஆட்சி 15 நாட்களில் கவிழும் என்பதில் சந்தேகம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு கர்நாடகாவில் புதிய அரசு ஆட்சி அமைக்கும் என்றார்.