ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகா பாஜகவைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் ஊழல் குற்றசாட்டு சுமத்தியிருந்தார். வலதுசாரி அமைப்பான ஹிந்து வாஹினி என்ற அமைப்பின் தேசிய செயலாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சந்தோஷ்பாட்டீல், தனக்கு அரசின் சார்பாக, ரூ.4 கோடிக்கு வேலை ஒதுக்கப்பட்டதாகவும், அதை முடித்த பின்னரும் அதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை என்றும், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் 40 சதவீதம் குறைக்கவேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடமும் பேட்டியளித்திருந்தார். இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சந்தோஷ் காணாமல் போய் விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் விடுதி அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தனது தற்கொலை குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது தற்கொலைக்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மட்டுமே காரணம். எனது லட்சியங்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்த முடிவை நான் எடுக்கிறேன். நமது பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர், நமது அன்புக்குரிய லிங்காயத் தலைவர் பிஎஸ்ஒய் மற்றும் அனைவரும் எனது மரணத்திற்கு பின்னர், எனது மனைவி, மகனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதை அடுத்து அமைச்சர் ஈஸ்வரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சந்தோஷின் மரணத்திற்கு ஈஸ்வரப்பாதான் காரணம். அவர் ஒரு ஊழல்வாதி என்று அனைவருக்கும் தெரியும். ஈஸ்வரப்பாவைக் கைது செய்ய வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்திருந்தார். மேலும் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் மரணம் குறித்து பராபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
