கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா  உள்துறைச் செயலாளர் பதவியிலிருந்து மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ஜூலை மாதத்தில் சிறையில் சோதனை நடத்தினார் அப்போதைய சிறைத் துறை டிஐஜி ரூபா. இந்த ஆய்வுக்கு பிறகு, சிறையில் தண்டனைக் கைதிகளாக உள்ள சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையில் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு டிஜிபி சத்யநாராயண ராவ் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்துள்ளார் என்று பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ரூபா சிறைத் துறையிலிருந்து போக்குவரத்து பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஜியாக பதவி உயர்வு பெற்ற ரூபா, கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 

இந்நிலையில், பெங்களூரு மாநகருக்கான பாதுகாப்பு திட்டத்திற்கான டெண்டர் விவகாரம் தொடர்பாக , ரூபா பெங்களூரு கூடுதல் கமிஷனர் ஹேமந்த் நிம்பல்கர் ஆகியோரிடையே மோதல் வெடித்தது. டெண்டர் குழுவின் தலைவரான நிம்பல்கர், ஒரு குழுவுக்கு ஆதரவாக செயல்பட்டு விதிகளை மீறுவதாக ரூபா குற்றம்சாட்டினார். மறுபுறம் நிம்பல்கர், எந்தவொரு அதிகாரமும் இல்லாமல் உள்துறை செயலாளர் ரூபா இந்த செயலில் தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து தலைமைச் செயலாளர் விஜய் பாஸ்கருக்கு கடிதம் எழுதிய ரூபா, தூண்டுதலின் பேரில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுப்பதை தடுக்கும் வகையில் கர்நாடக அரசு 6 ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்தது. அதில் டி.ரூபா, ஹேமந்த் நிம்பல்கர் ஆகியோரும் அடங்குவர். அதன்படி, உள்துறை செயலாளராக இருந்த ரூபா தற்போது மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராகவும், ஐ.ஜி நிம்பல்கர், பெங்களூரு உள் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கர்நாடக தலைமைச் செயலாளர் விஜய பாஸ்கர் நேற்று பிறப்பித்தார்.

சசிகலா முன்கூட்டியே விடுதலையாக முடியாது என உள்துறைச் செயலாளராக இருந்த ரூபா கூறிவந்தார். தற்போது அவரை உள்துறையிலிருந்து மாற்றம் செய்துள்ளது சசிகலா தரப்பினருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.