சசிகலாவை பெண்கள் சிறைக்கு மாற்ற கோரி டிராபிக் ராமசாமி கொடுத்த பொது நல மனுவை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

கடந்த 2015 ம் ஆண்டில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று கூறி, கர்நாடக தனிக்கோர்ட்டு தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் அவர்கள் தங்கள்மீது எந்த குற்றமும் இல்லை என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அதில் இருந்து விடுதலையும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களின் சொத்து குவிப்பு வழக்கின்மீது கர்நாடக அரசு மேல் முறையீட்டு மனு அளித்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்ததோடு சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 

ஜெயலலிதா மறைந்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க தமிழக அமைச்சர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் சிறையில் உள்ள தண்டனை குற்றவாளியை அமைச்சர்கள் சந்திப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதை தடுக்க சசிகலாவை துமகூருவில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனு ஐகோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, “இத்தகைய வழக்குகளில் கோர்ட்டு தலையிடாது. இதுபோன்ற முடிவுகளை அரசே எடுக்க வேண்டும்” என்று கூறி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.