மத்திய அரசு அறிவித்துள்ள ரூபாய் 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார் . கொரோனா பாதிப்பால் சீர்குலைந்துள்ள இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க " ஆத்மா நிர்பார் பாரத் அபியான் "  என்ற தற்சார்பு பொருளாதார திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார் ,  இதற்காக ரூபாய் 20 லட்சம் கோடி அதாவது நாட்டின் ஜிடிபியில் 10 சதவீதத்தை ஒதுக்கி இருப்பதாகவும் அவர் கூறினார் ,  ஆரம்பத்தில் இந்த திட்டம் குறித்து அறிவிப்பை கேட்டவர்கள் 20 லட்சம் கோடி  ரூபாய்க்கு திட்டமா.! என வியந்தனர் ,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாட்களுக்கும் மேலாக ஊடகங்களில் தோன்றி 20 லட்சம் கோடி எந்தெந்த வகையில் தரப்படுகின்றன என அறிவித்தார். 

பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி அல்ல ஒரு சில லட்சம் கோடிகள்தான்  என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன ,  இந்நிலையில் இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் குமாரசாமி , கொரோனாவால் மாநிலங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன ,  அதனால் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று 15 ஆவது நிதி கமிஷன் பரிந்துரை செய்துள்ளது .  ஆனால் மத்திய அரசு அறிவித்துள்ள ரூபாய் 20 லட்சம் கோடி நிதி தொகுப்பில் மாநிலங்களுக்கு எந்த நிதி உதவியும்  அறிவிக்கவில்லை ,  கடன் கொடுப்பதாக கூறுகிறார்கள் நிவாரணம் என்றால் கடன் கொடுப்பது அல்ல. 

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ரூபாய் 20 லட்சம் கோடி தொகுப்பால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது ,  40 கோடி மக்கள் வறுமையில் உள்ளனர் ,  அந்த தொகுப்பு ஏழை மக்களுக்கு உதவாது,  தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை அரசு செலுத்துவதாக கூறியுள்ளது இதற்காக மத்திய அரசுக்கு  ரூபாய் 2500 கோடி மட்டுமே செலவாகும் ,  மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூபாய் 90 கோடி கொடுப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது இதற்கு மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.  இதற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை ,  மத்திய அரசின் ரூபாய் 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை, ஒரு முட்டாள்தனமான அறிவிப்புகள், மக்களை திசை திருப்பவே இத்தகைய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என அவர் கடுமையாக சாடியுள்ளார் .