கர்நாடகாவில் இனி காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து தேர்தலை சந்திக்க மாட்டோம் என்று முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்தது. கடந்த மாதம் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.  தற்போது 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் காரணமாக பாஜக ஆட்சி நூலிழையில் மெஜாரிட்டி பெற்று ஆட்சி நடத்திவருகிறது. 17 இடைத்தேர்தலுக்கு பிறகு 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜகவால் மெஜாரிட்டி பெற முடியும்.

 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ், மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது. ஆட்சி கவிழ்ப்புக்கு சித்தராமையாதான் காரணாம் என்று மதசார்பற்ற ஜனதாதளம் வெளிப்படையாக குற்றம் சாட்டிவருகிறது. இந்த சூழ்நிலையில் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார்.
“ஆட்சியில் இருந்தவரஒ கூட்டணி கட்சியான காங்கிரஸ் என்னை ஒரு முதல்வராககூடப் பார்க்கவில்லை. என்னை கணக்குப் பிள்ளையைப் போல நடத்தினார்கள். எத்தனை நாளைக்குத்தான் நான் அடிமையாக இருப்பது? சித்தராமையா விருப்பத்தின் பேரில் அவரேதான் மூத்த அதிகாரிகளை நியமித்தார். காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர்கள் அவர்களுடைய விருப்பப்படி அதிகாரிகளை பெற்றுக்கொண்டனர். எல்லாம் செய்துவிட்டு எங்களுக்கு மட்டும் இடையூறு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.


பாஜகவைவிட சித்தராமையாவுக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம்தன் எதிரி. என்னை பதவியிலிருந்து அனுப்ப எல்லா முயற்சிகளையும் அவர் செய்தார் என்பது எனக்குத் தெரியும். இந்தக் கூட்டணி ஆட்சியை நடத்துவது கடினமாக இருப்பதாக எனது தந்தையான தேவகவுடாவிடம் தெரிவித்தேன்.  நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நிற்போம் என்ற யோசனையையும் முன்வைத்தேன். பாஜகவுக்கு எதிராகப் வலுவான கூட்டணி தேவை என்பதால் கர்நாடகாவில் கூட்டணியோடு தேர்தலை சந்தித்தோம்.
கர்நாடகாவில் 17 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரும் என்பதைவிட பொதுத்தேர்தல் வரும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். அப்படி தேர்தல் வரும்பட்சத்தில் காங்கிரசோடு சேர்ந்து நாங்கள் தேர்தலை சந்திக்க மாட்டோம்” என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.