Karnataka Elections: ஓபிஎஸ் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிப்பு.. இபிஎஸ் வேட்பாளரின் நிலை என்ன?
இபிஎஸ்-க்கு போட்டியாக ஓபிஎஸ் அணி சார்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கோலார் தங்கவயல், புலிகேசி நகர் தொகுதி ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக கூட்டணி இடம்பெற்றுள்ள அதிமுக கர்நாடகாவில் போட்டியிட விரும்பம் தெரிவித்தது. இதுதொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் தனித்தனியே பாஜக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படாததால் புலிகேசி நகர் தொகுதியில் அன்பழகன் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து இபிஎஸ்-க்கு போட்டியாக ஓபிஎஸ் அணி சார்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன், காந்திநகர் தொகுதியில் குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா என்பவரும் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோலார் தங்கவயல், புலிகேசி நகர் தொகுதி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட அன்பரசன் என்பவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.