பெலகாவியில் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட மகாராஷ்டிராவுக்கு  விட்டுக்கொடுக்க முடியாது என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்  கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையிலுள்ள பெலகாவி யாருக்கு சொந்தம் என்பதில் இரு மாநிலங்களுக்கும் இடையே உரிமைப் பிரச்சினை இருந்து வருகிறது.  பெலகாவியில் மராட்டியர்கள் அதிகம் வசிப்பதால்  ராஜ்யோத்சவா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எதிர்ப்புகள் எழுகிறது .

இந்நிலையில் பெலகாவியை மகாராஷ்ட்ரா உடன் இணைக்க வேண்டு மென சிவசேனா மற்றும் ஏகி கிரன்  உள்ளிட்ட அமைப்புகள் கோரி வருகின்றன. இந்நிலையில்  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பெலகாவி மகாராஷ்டிராவுக்கு சொந்தமான பகுதி என குரல் எழுப்பி வருகிறார்.  அவரின் கருத்துக்கு கர்நாடகாவின் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இதற்கிடையே  பெலகாவியில் உள்ள கடைகளில் எழுதப்பட்டுள்ள மராட்டிய எழுத்துகளைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்தை  கன்னட அமைப்புகள்  நடத்தி வருகின்றன.   இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா,  அரசியல் ஆதாயத்திற்காக பெலகாவி விவகாரத்தை உத்தவ் தாக்கரே கையில் எடுத்துள்ளார்.   இதன்மூலம் சிக்கலை அதிகப்படுத்த அவர் முயற்சிக்கிறார். 

பெலகாவி தொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுனர்கள்குழு ,   இது கர்நாடகாவுக்கு  சொந்தமான பகுதி என தெரிவித்துள்ளனர். ஆனால் உத்தவ் தாக்கரே இதில் பிரச்சனை செய்ய பார்க்கிறார்,  கர்நாடகாவின் நிலம்,  நீர் , மொழி ஆகியவற்றில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை ,  பெலகாவி விவகாரம் ஏற்கனவே முடிந்து போன ஒன்று எக்காரணத்தைக் கொண்டும் பெலகாவி மாவட்டத்தில் ஒரு அங்குலம் நிலம் கூட யாருக்கும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க படாது என எடியூரப்பா கொந்தளித்துள்ளார்.