ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கையை கண்டித்து முன்னாள் தென் சென்னை மாவட்ட செயலாளர் கராத்தே தியாகராஜன் அடையாறில் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

கைது நடவடிக்கையை கண்டித்து அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன், கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்துகிறாரா? நான் கார்த்தி சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். கே.எஸ்.அழகிரி ஏன் சந்திக்கவில்லை? 

கே.எஸ்.அழகிரி மீது விரைவில் வழக்கு வரப்போகிறது. அதற்கு பயந்தே அவர் சிதம்பரம் விவகாரத்தில் பின் வாங்குகிறார். ப.சிதம்பரம் அடுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உருவெடுப்பதை தடுக்கவே பாஜக இப்படி செய்கிறது. இன்னும் 2 அமாவாசைக்குள் தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் ஏற்படும், விரைவில் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து சிதம்பரம் வழக்கிலிருந்து விடுதலையாவார். 

மு.க.ஸ்டாலின் இதுவரை தெளிவான கண்டனத்தை தெரிவிக்காமல் இருப்பது ஏன்? சில மாதங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது உடனடியாக ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். ஆனால்,  ஸ்டாலின் தற்பொழுது வரை தெளிவான கண்டனத்தை தெரிவிக்காமல் இருப்பது ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது’’ என அவர் தெரிவித்தார்.