மறைந்த டி.என்.சேஷனுக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக சிலை வைக்க வேண்டும் என்று வினோதமான கோரிக்கையை வைத்திருக்கிறார் சென்னை மா நகர முன்னாள் துணை மேயரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான கராத்தே தியாகராஜன்.


டி.என்.சேஷன் தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றுவதற்கு முன்பு தமிழக ஐ.ஏ.எஸ். கேடரில் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியராகவும் டி.என்.சேஷன் பணியாற்றியிருக்கிறார். இதேபோல மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராகவும் அவர் இருந்திருக்கிறார். தமிழக அரசின் போக்குவரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலராகவும் டி.என். சேஷன் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இந்தியாவின் 10-வது தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் பணியாற்றிய டி.என்.சேஷன், தேர்தல் ஆணைய விதிகளை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தார். தேர்தல் என்றால் எப்படி நடக்க வேண்டும், அரசியல் கட்சிகள் எப்படி நடக்க வேண்டும் என்று பாடம் எடுத்தவர் டி.என்.சேஷன். அதற்கு முன்பாக பல பதவிகளை அவர் வகித்தபோதும் தலைமை தேர்தல் ஆணையர் என்ற பதவியால், அந்தப் பதவிக்கே பெருமை கிடைக்கச் செய்தவர் டி.என்.சேஷன்.

 
அவருடைய மரணத்துக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். பிரதமர், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தார்கள். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரிடையாக சென்று டி.என்.சேஷனுக்கு இறுதி மரியாதைச் செலுத்தினார்கள். சென்னை மா நகராட்சி முன்னாள் துணை மேயரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான கராத்தே தியாகராஜனும் டி.என்.சேஷனுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வித்தியாசமான யோசனை ஒன்றை திமுகவுக்கு வழங்கினார்.


“1996ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் தனியாக பிரிந்தது. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் கட்சி தொடங்கப்பட்டது. என்றபோதும் அந்தக் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுத்து, கட்சியை அங்கீகரித்தவர் அப்போது தேர்தல் ஆணையராக இருந்த டி என் சேஷன். அந்தத்தேர்தலில் திமுகவுடன் தாமக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. அப்போது திமுக ஆட்சிக்கு வர தாமக கூட்டணியும் முக்கிய காரணம்.
இதேபோல 1993-ல் மதிமுக பிரிந்த போது திமுகவின் உதயசூரியன் சின்னத்தை வைகோவும் கேட்டார். இதனால், கட்சி சின்னம் முடக்கப்பட்டபோது, காப்பாற்றி திமுகவுக்கு உதவி செய்தவர் டி.சேஷன். அவருக்கு திமுக நன்றிக் கடன் பட்டுள்ளது. எனவே அண்ணா அறிவாலயத்தில் சேஷனுக்கு திமுக சிலை வைக்க வேண்டும்” என்று கூறினார்.