தன் தலைமையை விட்டு விலகிப்போகும் நிர்வாகிகளை ஜெயலலிதா நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் சிலர் மட்டும் விதிவிலக்கு. அவர்களில் இருவர் சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர் சேகர் பாபு, இன்னொருவர் கராத்தே தியாகராஜன். வெட்டி வா! என்று ஜெ., கட்டளையிட்டால் கட்டி வந்து, அவரது காலடியில் போட்டவர்கள். தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோதே, ஸ்டாலினுக்கு சிம்மசொப்பனமாக இருந்து ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தியவர்கள். 

உட்கட்சி பஞ்சாயத்தினால் அவர்களிருவரும் அ.தி.மு.க.விலிருந்து விலகி, சேகர்பாபு தி.மு.க.விலும், கராத்தே தியாகராஜன் காங்கிரஸிலும் இணைந்தனர். இதில் ஜெ.,வுக்கு வருத்தமே. இதில் சேகர் பாபு ஸ்டாலினின் நெருக்கத்தைப்  பெற்று முன்னணிக்கு வந்துவிட்டார். ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸில் இருந்தாலும் கூட இன்னமும் ஸ்டாலினை முறைத்துக் கொண்டேதான் பின் வரிசையிலிருக்கிறார் கராத்தே. 

ஆனாலும் அவ்வப்போது அவர் பற்ற வைக்கும் அதிரடி பட்டாசுகள், ஸ்டாலினை திரும்பிப் பார்க்க வைக்கும். அந்தவகையில் இப்போது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்குள் ஒரு வெடிகுண்டை கொளுத்திப் போட்டுள்ளார் கராத்தே. அது, ‘தி.மு.க. எங்களை மதிப்பதில்லை’ எனும் வாக்கியம்தான். 

விரிவாக பேசும் கராத்தே...”தி.மு.க. அனைத்துக் கட்சி கூட்டத்தையோ அல்லது கூட்டணி கட்சி கூட்டத்தையோ நடத்தினால் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசரே செல்கிறார். இல்லையென்றா சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமி செல்கிறார். அவரும் இல்லையென்றால் முன்னாள் மாநில தலைவர்கள் யாராவது சென்று வலு சேர்க்கிறார்கள். 

ஆனால் காங்கிரஸ் நடத்தும் கூட்டங்களுக்கு முக்கிய மனிதர்களை அனுப்புவதில்லை தி.மு.க. சமீபத்தில் எங்கள்  இயக்கம் பாரத் பந்த் தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு வழக்கறிஞர் கிரிராஜன் வந்தார், பந்த் அன்றைக்கும் கிரிராஜனே வந்தார். ஸ்டாலின் வந்திருக்கலாம், முடியவில்லையா மா.செயலாளரான ஜெ.அன்பழகனாவது வந்திருக்கலாம். அட குறைந்தபட்சம் பகுதி செயலாளராவது வந்திருக்கலாம். ஆனால் அதை கூட செய்வதில்லை ஸ்டாலின். 

தி.மு.க.விடம் மரியாதையை எதிர்பார்க்கிறோம் நாங்கள் அவ்வளவே. மாநிலத்தில் அவர்கள் தலைமை என்றாலும், நாங்கள் தேசிய கட்சி என்பதற்கான மரியாதையை அவர்கள் தரவேண்டும் என்று நான் தன்மானத்தோடு கேட்கிறேன். இந்த வருத்தத்தை நான் வெளிப்படையாக பேசினால், கூட்டணியை உடைக்க முயல்கிறேன்! என்று என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ” என்று பொங்கியிருப்பவர்.

அடுத்து ரஜினி பற்றி பேசுகையில் “ரஜினி மன்றத்தின் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். ஆனால் காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி.யில் சேராமல் தனித்துதான் கட்சி தொடங்குவார். அவர் பி.ஜே.பி.க்கு போகமாட்டார் என்று தெளிவாக ஏன் சொல்கிறேன் தெரியுமா?...

அவரது வரலாறை எடுத்துக்குங்க! அவர் முதல்ல தங்கியிருந்த புதுப்பேட்டை வீடு, இப்போ குடியிருக்கிற போயஸ்கார்டன் வீடு, அவருடைய ராகவேந்திரா மண்டபம்..இது எல்லாமே முஸ்லீம்களின் சொத்துக்கள். அவர்களிடம் இருந்து வாங்கித்தான் அதில் வாழ்க்கை நடத்துகிறார். இப்படியான நட்புறவில் இஸ்லாமியர்களுடன்  இருப்பவர் எப்படி பி.ஜே.பி.யில் இணைவார்? நிச்சயம் மாட்டார்.” என்று வெடி வெடித்திருக்கிறார். 

தமிழகத்தில் எவ்வளவு முயன்றும் காலூன்ற முடியாத கடுப்பிலிருக்கும் பி.ஜே.பி. ரஜினியை வைத்துத்தான் அதை நிறைவேற்றும் எண்ணத்தில் இருப்பதாக தகவல். இச்சூழலில் இந்த புது களேபரம் அவர்களை மண்டை காய வைத்திருப்பது உறுதி.