காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிலமாக நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜனை பின்னால் இருந்து யாரோ இயக்குவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன். ''நான் பேசிய நாளில் மாவட்ட செயலாளர்கள் பலரும்கூட என் கருத்தையே கூறினர். ஆனால் அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என்மீது மட்டும் ஏன் இத்தனை அழுத்தம் கொடுக்கின்றனர். நான் பேசிய கூட்டத்திலேயே காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இருந்தார். அப்போதே அவர் ஏன் என் பேச்சை கண்டிக்கவில்லை. ஏன் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி மோடியை ஆதரித்து விஜயதரணி எம்எல்ஏ பேசினார். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? 

என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு திமுக மீது பழிபோடுகிறார்கள். ஆனால் உண்மையில் கே.எஸ்.அழகிரிக்கு தெரிந்து தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒழுங்கீனமாக நடந்துகொண்டாய், அதனால்தான் சஸ்பெண்ட் என கே.எஸ்.அழகிரி சொல்ல வேண்டியதுதானே. ஆனால் அதனை சொல்லாமல் திமுக மீது பழிபோடுகிறார்கள். 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு என்றுமே நான் விசுவாசமாக இருப்பேன். அவருக்குத் தெரிந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா..? இல்லை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபாலே இந்த நடவடிக்கையை எடுத்தாரா எனத் தெரியவில்லை. ப.சிதம்பரத்தை மதிக்கிறேன். நான் என்றுமே ராகுல்காந்தியின் விசுவாசி. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரின் இரத்தத்தை பார்த்தவன் நான். என்றுமே காங்கிரஸ்காரனாகவே இருப்பேன்'' எனத் தெரிவித்தார். 

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘’ கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு. நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது. காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் குறித்து மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டார்கள். நான் விளக்கம் கொடுத்து அதன் அடிப்படையிலேயே கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார். கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை இருக்கத்தான் செய்யும்’’ எனத் தெரிவித்தார். 

கராத்தே தியாகராஜன் நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் நெருக்கமானவர். தியாகராஜனை பாஜகவோ, அதிமுகவோ பின் இருந்து இயக்குகிறது என மெல்லிய வதந்தியும் அவ்வப்போது வந்துபோகிறது. ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கண்டு கராத்தே தியாகராஜன் பின் வாங்கியதில்லை. அவர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போகிறார். ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் தான் அரசியல் போட்டி இருக்கும் என அவர் இந்த நேரத்தில் கூறி இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.